Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சுதந்திர தின கொண்டாட்டத்தில் வெற்றியாளர் பட்டத்தை வென்றது மலேசியா

01/09/2025 07:32 PM

பாரிஸ், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு உலக பூப்பந்து போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில், நாட்டின் சென் தாங் ஜீ-தோ ஈ வேய் ஜோடி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

நாட்டின் 68-வது தேசிய தினக் கொண்டாட்டத்தை ஒட்டி, நேற்று பிரான்ஸ் மண்ணில் இவர்கள் படைத்த சாதனை மலேசியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளது.

இறுதி ஆட்டத்தில், உலகத் தர வரிசையில் நான்காவது இடத்தில் உள்ள தாங் ஜீ-தோ ஈ வேய் ஜோடி, சீனாவின் ஜியாங் ஜென் பாங்-வீ யா சின் இணையை எதிர்கொண்டது.

முதல் செட்டை 21-15 என்ற புள்ளிகள் வென்று ஆட்டத்தை ஆக்கிரமித்த தாங் ஜீ-தோ ஈ வேய், அதே உத்வேகத்துடன் இரண்டாம் செட்டிலும் விளையாடினர்.

அதில், 21-14 என்று, 39 நிமிடங்களிலேயே தங்களின் வெற்றியை உறுதி செய்து, அயலகத்தில் நாட்டின் தேசியக் கொடியை அவர்கள் உயர பறக்கச் செய்தனர்.

இதன் வழி, உலக வெற்றியாளர் போட்டியின், கலப்பு இரட்டையர் பிரிவில் முதன் முறையாக பட்டத்தை கைப்பற்றி மலேசியா புதிய வரலாற்றை படைத்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற இப்போட்டியில் நாட்டின் கூ கியன் கீட்- வோங் பெய் டிட்டி இணை வெண்கலப் பதக்கம் வெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தேசிய தினத்தில் கிடைத்த இந்த வெற்றி தமக்கு அர்த்தமுள்ள ஒன்று எனவும் தங்களுக்கு ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி கூற விரும்புவதாக தோ ஈ வேய் தெரிவித்துள்ளார்.

''சரி, உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நானும் தோவும் உலக வெற்றியாளராவோம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எங்கள் பயிற்றுநர் எங்களை நம்பினார். நாம் நேர்மையானவங்கள். நீங்கள் உலக வெற்றியாளராவீர்கள். எங்களுக்கு மட்டுமல்ல, மலேசியர்களுக்கும் கூட. மெர்டேக்கா தினம் என்பதால் அவர்களும் உலக வெற்றியாளர்கள், இல்லையா?'' என்றார் அவர்.

நேற்று, அடிடாஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்குப் பிறகு, மலேசிய பூப்பந்து சங்கம், ஊடகங்களுக்குப் பகிர்ந்த காணொளியில் தாங் ஜீ-தோ ஈ வேய் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)