Ad Banner
Ad Banner
 பொது

ரமணன் தலைமையில்  தமிழ்ப்பள்ளிகள் பராமரிப்புத் திட்டங்களை செயல்படுத்தும் சிறப்புக் கூட்டம்

29/08/2025 07:58 PM

புத்ராஜெயா, 29 ஆகஸ்ட் (பெர்னாமா) - வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்,  தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்திருந்ததைத் தொடர்ந்து...

மூன்று கோடி ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி கூடுதல் வளாகக் கட்டுமானம், மாற்று வளாகம் உள்ளிட்ட இதர பராமரிப்புத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு அவர் தலைமைத் தாங்கினார்.

கல்வி துணை அமைச்சர் வோங் கா வோங்குடன் அமைச்சின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதேவேளையில் பள்ளி கட்டுமானம் மற்றும் வளர்ச்சித் திட்டம் குறித்து கடந்த வாரம்  கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் தாம் சந்திப்பை மேற்கொண்டதாகவும் அவர் அக்கூட்டத்தில் கூறினார். 

அக்கூட்டத்தில் முத்தாய்ப்பாக பேசப்பட்ட விவகாரங்களில், பேராக், கிளேபாங், சிலாங்கூர் நோர்த்ஹர்ம்கோக் (North Hummock) தோட்டம், ஜோகூர் கூலாய் பெசார் தோட்டம் மற்றும் ரினி தோட்டம், பேராக் ஒய்.எம்.எச்.ஏ (YMHA), பினாங்கு சுங்கை பாக்காப் ஆகிய தமிழ்ப்பள்ளிகளின் கூடுதல் கட்டுமானத் திட்டமும் அடங்கும்.

குறிப்பாக பிரதமரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, இப்பள்ளி கட்டுமானப் பணிகள் அனைத்தும் பொது குத்தகைகள் மூலம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று ரமணன் கேட்டுக் கொண்டார்.

இதன் மூலம் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வசதியான, பாதுகாப்பான மற்றும் சிறந்த சூழ்நிலையில் பயில்வதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளி வளர்ச்சி குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி நிர்வாக வாரியத்துடன் தமது தரப்பு சந்திப்பு நடத்தும் என்றும் ரமணன் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)