ஈப்போ, 31 ஆகஸ்ட் (பெர்னாமா) --இன்று காலை பேராக் மாநில அளவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு சுந்திர கொண்டாட்டத்தின் போது, அம்மாநில சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷாவை நெருங்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காலை மணி 8.20-க்கு பேராக் மாநில பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.
41 வயதுடைய உள்நாட்டு பெண்மணியான அவர், பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்படுவதற்கு முன்னர், மேடை மேலே ஏறியதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் நூர் ஹிஷாம் கூறினார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலே அப்பெண் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
முதற்கட்ட விசாரணை வழி, அவருக்கு போதைப்பொருள் தொடர்பாக முந்தைய குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப் பொருள் உட்கொள்ளாதது உறுதிசெய்யப்பட்டது.
மேலும், மனநல சிகிச்சை பெற்றதற்கான பதிவையும் கொண்டிருக்கும் அவர், தற்போது வரை அதன் நிபுணரின் மேற்பார்வையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)