ஈப்போ, 01 செப்டம்பர் (பெர்னாமா) -- பேராக் மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டத்தின்போது முதன்மை மேடையில் பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவை தாக்க முயற்சித்த உள்நாட்டு பெண் ஒருவர் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்த 42 வயதுடைய அப்பெண்ணுக்கான தடுப்புக் காவல் உத்தரவை மஜிஸ்திரேட் வார்டா நபிலா முஹமட் அப்துல் வாஹாப் வெளியிட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷ்னர் அபாங் சைனால் அபிடின் அபாங் அஹமாட் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 325/511-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
நேற்று, ஈப்போவில் நடைபெற்ற பேராக் மாநில அளவிலான அதிகாரப்பூர்வ தேசிய தின கொண்டாட்டத்தின் போது, முதன்மை மேடையில், அச்சந்தேக நபர் பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவைத் தாக்குவதைக் காண முடிந்தது.
பேராக் மாநில கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது மேடையில் ஏறிய அப்பெண்ணை, பணியில் இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
மனநல சிகிச்சை பெற்றதற்கான பதிவையும் கொண்டிருக்கும் அவர், தற்போது வரை அதன் நிபுணரின் மேற்பார்வையில் இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)