ஜார்ஜ் டவுன், 01 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டின் நல்வாழ்வை முன்னிருத்தி, பினாங்கு ஜார்ஜ் டவுனில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் 5,000 க்கும் மேற்பட்ட பௌத்த மதத்தினர் கலந்து கொண்டனர்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 160 க்கும் மேற்பட்ட புத்த துறவிகளின் அமைதியான அணிவகுப்புடன் இப்பிராத்தனை காலை மணி 7.30 அளவில் தொடங்கியது.
68-வது சுதந்திர தினத்திற்கு மறுநாளான இன்று நடைபெற்ற இந்த பிராத்தனையை தாய்லாந்து துணைத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் 'United Buddhist Order of Malaysia', யு.பி.ஓ.எம் ஏற்பாடு செய்திருந்தது.
உணவு, தினசரி தேவையான பொருட்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை துறவிகளுக்கு நன்கொடையாக வழங்க காலை 6.30 மணி முதலே பொதுமக்கள் கூடினர்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, சமூகநலன் மட்டுமின்றி, பல்லின மக்களிடையே ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதாக யு.பி.ஓ.எம் உதவித் தலைவர் டாக்டர் யீப் ஜிம் ஈன் கூறினார்.
''இந்நிகழ்ச்சி ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் வசதி குறைந்தவர்கள் மீது பரிவு காட்டவும் நடத்தப்பட்டது. அதோடு, இங்குள்ள மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப நன்கொடை வழங்கலாம். விலை பட்டியல் இல்லை என்று நாங்கள் கூறுவோம். தூய மனதின் அடிப்படையிலேயே அவர்கள் நன்கொடை செய்கின்றனர்,'' என்றார் அவர்.
ஆன்மீக நோக்கம் மட்டுமின்றி, மலேசியா தொடர்ந்து செழித்து மக்களிடையே ஒற்றுமை நிலைக்கவும், நாட்டின் நல்லிணக்கத்திற்காக பௌத்த மதத்தினரின் அடையாளமாகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)