சுபாங் ஜெயா, 01 செப்டம்பர் (பெர்னாமா) -- ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம், சாரா-இன் கீழ், நேற்று தொடங்கி வழங்கப்படும் 100 ரிங்கிட் வழி, மக்களில் பலர் அடிப்படை பொருள்களை வாங்கி வருகின்றனர்.
நேற்று, சுபாங் ஜெயா, யு.எஸ்.ஜே1-இல் உள்ள மைடின் பேரங்காடியில் காலை மணி, 10 தொடங்கியே பொருள்களை வாங்குவதற்கு மக்கள் கூடியது பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
இந்த உதவித் தொகை தங்களின் நிதி சுமையைக் குறைக்க உதவியதாக மகிழ்ச்சி தெரிவித்த மக்கள், மடானி அரசாங்கத்திற்கு தங்களின் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
''இந்த சாரா திட்டம் மிகவும் நன்மையளிக்கக்கூடியது. நான் 100 ரிங்கிட்டிற்கு அதிகமான பொருட்கள் வாங்கினேன். நமது குடும்பத்தில் நால்வர் இருந்தால், 400 ரிங்கிட் கிடைக்கும். அதன்வழி அதிகமான பொருட்களை வாங்கலாம். உதாரணத்திற்கு 10 கிலோகிராம் அரிசி இரண்டு பாக்கெட் வாங்கலாம். சமையல் எண்ணெய் இரண்டு பாட்டில்கள் வாங்கலாம். எனவே, (கிடைத்த இந்த தொகையை) வீணடிக்காமல், பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்று ஜெயலட்சுமி கிருஷ்ணசாமி என்பவர் தெரிவித்தார்.
''அது வேறு வாரம். நானும் அன்வாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவில் அனைவரும் மலேசியாவின் பிள்ளைகள் என்று அவர் கூறினார். மலேசியாவின் பிள்ளை,'' என்றார் சான் ஆ லெக் என்பவர்.
''தினசரி தேவைக்கு உதவும் என்று நான் நினைக்கின்றேன். மக்களுக்கும் நல்லது காரணம் பொருட்களும் விலை உயர்வு கண்டுள்ளன. 100 ரிங்கிட் சிறிய தொகையாக இருந்தாலும், அதிகமான பொருட்களை வாங்க முடியாவிட்டாலும், எதுவும் இல்லாமல் இருப்பதற்கு இதற்கு (இந்தத் தொகை கிடைத்ததற்கு) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்று அஸ்மி சாலே என்பவர் குறிப்பிட்டார்.
வருங்காலத்தில் இந்தத் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)