கோலாலம்பூர் , 12 செப்டம்பர் (பெர்னாமா) -- மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், வனுவாட்டு நாட்டைச் சேர்ந்த ஆடவரை உட்படுத்தி, புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் நோக்கத்தில், எம்.எம்.2.எச் எனப்படும் மலேசியா எனது இரண்டாவது இல்லத்தின் பயண ஆவணத்தைப் போலியாக்கிய குற்றத்திற்காக, குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சத்து 50,000 ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
தற்காப்பு வாதத்தின் இறுதியில் அக்குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதால், 51 வயதான ஷம்சுடின் இஷாக்கிற்கு, நீதிபதி டத்தோ அசார் அப்துல் ஹமிட் அத்தண்டனையை விதித்தார்.
எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் செய்யப்பட்ட மேல்முறையீட்டு முடிவிற்காகக் காத்திருப்பதால், சிறைத் தண்டனையை ஒத்திவைக்குமாறு குற்றவாளியைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் தி.ஹர்பால் சிங் செய்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
எனவே, ஜாமின் தொகை 15,000 ரிங்கிட்டிலிருந்து 30,000 ரிங்கிட்டிற்கு அதிகரிக்கப்பட்டு, தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் அந்நபர் விடுவிக்கப்பட்டார்.
2007-ஆம் ஆண்டு ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் Seksyen 26E-இன் கீழ் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட முதல் வழக்காகும்.
புலம்பெயர்ந்தோர் கடத்தலை எளிதாக்கும் நோக்கத்திற்காக, வனுவாட்டு பிரஜையான Li Xingqiang-க்கு எம்.எம்.2.எச் பயண ஆவணத்தைப் போலியாகத் தயாரித்த குற்றத்திற்காக, ஷம்சுடின் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)