கோத்தா கினபாலு, 12 செப்டம்பர் (பெர்னாமா) -- சாரா கைரினா மகாதீர் மரணத்திற்கு முன்னர், அவர் தமது நண்பரின் பணத்தைத் திருடியதாக, பள்ளி மாணவர்களிடையே தகவல் பரவி வந்ததாக, இன்று கோத்தா கினபாலு மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துயரச் சம்பவத்திற்குப் பின்னர், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களிடமிருந்து அத்திருட்டு செயல் குறித்த கதையைத் தாம் கேட்டதாக, லினா மன்சோடிங் சலிஹா தெரிவித்தார்.
2012-ஆம் ஆண்டு முதல் அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் லினா, வழக்கு விசாரணையின் ஏழாவது நாளில் சாரா கைரினாவின் குடும்ப வழக்கறிஞர் ஷஹ்லான் ஜுஃப்ரியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அத்தகவல்களைத் தெரிவித்தார்.
அச்சம்பவத்திற்கு முந்தைய நாள், துணிகளை உலர்த்தும் பகுதியில் A என்ற மாணவி தம்மைச் சந்தித்ததாகவும், தனது பள்ளிப் பையில் இருந்த 300 ரிங்கிட்டும் ஒரு வங்கி அட்டையையும் காணவில்லை என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாரா கைரினா மட்டும் ஏன் குற்றம் சாட்டப்பட்டார் என்று ஷஹ்லன் கேட்டபோது, லினா தனக்குத் தெரியாது என்று பதிலளித்தார்.
தங்கும் விடுதி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள படிவம் ஒன்று மாணவர்கள் தங்கியிருக்கும் அனைத்து அறைகளும் நான்காம் படிவ மாணவர்களின் கண்காணிப்பில் இருந்ததால், மாணவி A இத்தகவல் குறித்து நான்காம் படிவ மாணவர்களிடம் புகார் அளித்ததாக லினா கூறினார்.
திருட்டு குற்றச்சாட்டு குறித்து தெரிய வந்தப் பின்னர், நான்காம் படிவ மாணவர்கள் என்ன செய்தனர் என்பது தமக்குத் தெரியாது என்றும் அவர் விவரித்தார்.
ஆனால், நான்காம் படிவ மாணவர்கள் அவ்விவகாரம் குறித்து விசாரிக்க சாரா கைரினாவை அழைத்ததற்கான சாத்தியக்கூறுகளை லினா மறுக்கவில்லை.
பின்னர், இத்தகவல் சாரா கைரினாவின் விடுதித் தலைவர் மூலம் ஆண் தங்கும் விடுதியின் வார்டன் ஒருவருக்குத் தெரிய வந்ததாக லினா தெரிவித்தார்.
திருட்டு குற்றச்சாட்டைத் தவிர, சாரா கைரினாவைப் பற்றிய வேறு எந்தக் கதைகளையும் தான் கேள்விப்பட்டதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)