யான், 13 செப்டம்பர் (பெர்னாமா) -- கெடா, யான், குவார் செம்படாக், தாமான் நோனாவில், பெண் ஒருவரும் கைதொலைபேசி விற்பனையாளர் ஒருவரும், மரணமடையும் வரை கத்திக் குத்து நடத்திய சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர், ஆறு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கொலை வழக்கு என்பதால், போலீசார் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, 29 வயதுடைய அச்சந்தேக நபருக்கான தடுப்புக் காவல் உத்தரவை மஜிஸ்திரேட் நோர் ஃபஸ்லினா மூசா வெளியிட்டார்.
நேற்று காலை மணி 9.45-க்கு திரெங்கானு, கோலா திரெங்கானுவில் அச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக யான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டென் முஹமட் ஹமிசி அப்துல்லா தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை, குவார் செம்படாக், தாமான் நோனாவில் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு குத்தப்பட்டதால் 30 வயதான ஓர் ஆடவரும் 28 வயதான பெண் ஒருவரும் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இரவு மணி 9.40 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அப்பெண் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டோன் வீரா ரக காரின் முன்னிருக்கையிலும், அவ்வாடர் சாலையில் விழுந்து கிடக்கவும் காணப்பட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டிருப்பவருக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)