கோலாலம்பூர், 15 செப்டம்பர் (பெர்னாமா) - மலேசிய ஏய்ட்ஸ் மன்றம் அண்மையில் சேகரித்த தரவுகளின் அடிப்படையில், நாட்டில் எச்.ஐ.வி. கிருமி கண்டவர்களில் நாற்பது விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் இளைஞர்கள் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அதில் 13 முதல் 19 வயது வரையிலான பதின்ம வயதினரை உட்படுத்தி நான்கு விழுக்காட்டு சம்பவங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நோய் குறித்த பல நவீன மருத்துவ சிகிச்சை முறைகளை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தி இருப்பதால், அச்சமும் நாணமும் இன்றி இளைஞர்கள், அதற்கான பரிசோதனைகளையும் சிகிச்சை முறைகளையும் பெற்றுக் கொள்ள தயங்க வேண்டாம் என்று மலேசிய ஏய்ட்ஸ் மன்றத்தின் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் தினேஷ் மகாலிங்கம் கேட்டுக் கொண்டார்.
"சிடிஃபோர்ம் மற்றும் வைரல்லென்ட் என்று இருவகைப் பிரிவுகளைப் பார்க்கலாம். வைரல்லென்ட் என்பது உடலில் உள்ள அந்த கிருமியின் ஏற்றம், இறக்கம், நிலைப்பாடு ஆகியவை குறித்து விளக்கப்படும். அதேவேளையில் சிடிஃபோர்ம் என்பது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய குறைய இத்தொற்று அதிகம் பலம் பெற்று பல்வேறு விதமான உபாதைகளை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.
எச்.ஐ.வி.கிருமி கண்டவர்கள் அதன் அறிகுறிகளை தொடக்கத்திலே கண்டறிந்து முறையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டால் ஏய்ட்ஸ் உயிர்கொல்லியிலிருந்து அவர்களால் தங்களை விடுவித்து கொள்ளும் சாத்தியமும் உள்ளதாக டாக்டர் தினேஷ் விவரித்தார்.
"ஏனெனில் அவரவர்களின் வாழ்க்கை முறை அவர்களுக்குத் தான் தெரியும். எனவே, முறையற்ற வாழ்க்கை வாழும் இளைஞர்கள் முடிந்தவரை தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும் அவ்வாறு பரிசோதிப்பவர்களின் தரவுகள் அனைத்தும் எவ்வித கசிவும் இன்றி பாதுகாக்கப்படும்,"என்றார் அவர்.
இக்கிருமி தொற்று கண்டவர்களில் பெரும்பாலோருக்கு எவ்வித அறிகுறியும் தென்படாமல் நோய் முற்றிய பின்னரே தெரியவரும் என்பதால் எச்.ஐ.வி. தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையேனும் மருத்துவ பரிசோதனையை செய்து கொள்வது சிறந்தது என்று டாக்டர் தினேஷ் ஆலோசனை கூறினார்.
90ஆம் ஆண்டுகளில் 99 விழுக்காடு ஆண்களையும் ஒரு விழுக்காட்டு பெண்களையும் இத்தொற்று பாதித்திருந்த வேளையில், கடந்த 2023ஆம் ஆண்டு அந்நிலை மாறி ஒன்பது விழுக்காட்டுப் பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதேவேளையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது மலேசியாவில் பிரசவிக்கும் தாயிடமிருந்து பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று பரவும் சாத்தியமும் மிகவும் குறைந்து, அதன் எண்ணிக்கை சுழியமாக பதிவு செய்யப்பட்டிருப்பதும், நாட்டின் மருத்துவத் துறையின் சாதனையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளியேறிய பெர்னாமா செய்திகளின் பார்வை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மக்கள் சுகாதார மருத்துவருமாகிய அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 7.30-க்கு பார்வை நிகழ்ச்சி ஒளியேறுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)