புத்ராஜெயா, 19 செப்டம்பர் (பெர்னாமா) -- மூன்று கோடி ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி கூடுதல் வளாக கட்டுமானம், மாற்று வளாகம் மற்றும் சீரமைப்பு உட்பட தமிழ்ப் பள்ளிகளில் இதர பராமரிப்புத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இன்று காலை கல்வி துணை அமைச்சர் வோங் கா வோவுடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமித்திருக்கும் பொறுப்பாளருமான ரமணன் ராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் நான்காம் தேதி ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற முந்தைய கூட்டங்களின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடைபெற்றது.
பள்ளி மேம்பாட்டிற்கான ஒவ்வொரு ஆலோசனை, தேவை மற்றும் முன்னுரிமையை நேரடியாகவும், வெளிப்படையாகவும் விவாதிக்கும் வகையில் இந்த அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டதாக ரமணன் கூறினார்.
இச்சந்திப்பில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி, நோர்த் ஹம்மோக், கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய நான்கு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறை, ஆய்வகங்கள், நூலகங்கள், பாதுகாப்பு வசதிகள் அல்லது அடிப்படை பராமரிப்பு என தேவையான அனைத்து வசதிகளும் கிடைப்பதை அச்சந்திப்பு உறுதி செய்யும் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.
'கல்வி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்' என்ற மடானி அரசாங்கத்தின் கொள்கையில் நாடு தழுவிய அளவிலான அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)