கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) - Harley - Davidson மோட்டார் சைக்கிளில் இந்தியாவில் நீண்ட தூரம் பயணித்த முதல் மலேசியர் என்ற பெருமையை அடைந்துள்ளதோடு, உலகின் உயர்ந்த எல்லைப் பகுதியான Umling La Pass சாலையையும் அதே மோட்டார் சைக்கிளில் கடந்த முதல் மலேசியர் எனும் இரட்டை சாதனைகளுக்காக...
SHADOWFAX MC மோட்டார் சைக்கிள் கிளப்பின் தோற்றுநர் டத்தோ முருகானந்தம் ராமகிருஷ்ணா என்ற இயற்பெயரைக் கொண்ட டத்தோ ஆனந்த் மற்றும் சஞ்சீவி ரெங்கசாமி ஆகிய இருவரும் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
இதுபோன்ற நெடுந்தூர மற்றும் சவால்மிக்க பயணத்திற்கு பெரும்பாலும் Royal Enfield ரக மோட்டார் சைக்கிளையே தேர்வு செய்ய பலரும் விரும்புவர்.
ஆனால், தாங்களோ Harley - Davidson மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி 38 நாள்களில் இச்சாதனையைப் புரிந்ததாக நேற்று மாலை கோலாலம்பூரிலுள்ள Route 77 Harley-Davidson-இல் நடைபெற்ற பாராட்டு விழாவில் டத்தோ ஆனந்த் கூறினார்.
கடினமான பயணமாக இருந்தாலும், மன உறுதியோடு, இலக்கை அடைய வேண்டும் என்ற வேட்கை கடைசிவரை தம்மை விட்டு நீங்காமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மலேசிய சாதனை புத்தக்கத்தில் தமது பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.
கடினமான சாலைகளையும் தன்னம்பிக்கையோடு கடந்து சாதனையை எட்டிய டத்தோ ஆனந்த், சஞ்சீவி ஆகிய இருவர் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் புகழாரம் சூட்டினார்.
நாடு தழுவிய அளவில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெரிய அளவிலான மோட்டார் சைக்கிளைக் கொண்டு இதுபோன்ற பயணங்களை ஆங்காங்கே மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தகையோரை ஒன்றிணைத்து தொடர்பை விரிவுபடுத்திக் கொள்வதுடன் அவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட இதர தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அரசாங்கத் தரப்பிலிருந்து தாம் போதுமான உதவிகளை செய்வதாகவும் சிவராஜ் உறுதியளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)