கோலாலம்பூர், ஜனவரி 12 (பெர்னாமா) -- ஆரம்பப் பள்ளிகளுக்கான யூ.பி.எஸ்.ஆர் மற்றும் படிவம் மூன்று மாணவர்களுக்கான பி.டி.3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவதன் தேவை குறித்த ஆய்வு கூடிய விரைவில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு அடுத்தக்கட்ட பரிசீலனைக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
பெற்றோரின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொள்வதோடு பள்ளி அடிப்படையிலான திறன் மதிப்பீட்டு அமலாக்கத்தை மதிப்பாய்வு செய்ய இந்த ஆய்வு வழிவகுக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
ஃபட்லினா சிடேக் மற்றும் யூ.பி.எஸ்.ஆர் -ஐ செயல்படுத்துவதற்கான தேவைகளை ஆய்வு செய்யுமாறு எம்-பி-பி-கே எனப்படும் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்திற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக ஃபட்லினா கூறினார்.
இன்று, 2026-ஆம் ஆண்டு கல்வி தவணைக்கான முதல் நாள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனைக் குறிப்பிட்டார்.
''அதனால்தான் நான் அதை முன்பே குறிப்பிட்டேன். எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள். மேலும் விரிவான ஆய்வுக்குப் பிறகு மக்களுக்கு ஒரு விளக்கத்தை வழங்குவோம். நாங்கள் அதை செயல்படுத்தி அமைச்சரவையில் தாக்கல் செய்வோம். இவ்வாண்டு என்று நான் எதிர்பார்க்கிறேன்.'' என்றார் ஃபட்லினா சிடேக்
2021-ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் ரத்துச் செய்யப்பட்ட வேளையில் 2022-ஆம் ஆண்டு பி.டி.3 தேர்வு ரத்துச் செய்யப்பட்டது. பின்னர் அவ்விரு தேர்வுகளும் பள்ளி அடிப்படையிலான திறன் மதிப்பீட்டுத் தேர்வுகளாக மாற்றம் கண்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)