மலாக்கா, பிப்ரவரி 02 (பெர்னாமா) -- இரண்டு லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமாகக் கையூட்டு பெற்றதாகத் தம்மீது சுமத்தப்பட்ட 20 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட வங்கி ஒன்றின் முன்னாள் விற்பனை நிர்வாகிக்கு 210,000 ரிங்கிட் அபராதம் விதித்து மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
2018ஆம் ஆண்டு மே முதல் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வீட்டு நிதி நிர்வகிப்பு வழக்குகளை இரண்டு சட்ட நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்து அனுப்ப உதவியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
நீதிபதி எலிசபெத் பயா வான் முன்னிலையில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மொழிப்பெயர்ப்பாளர் வாசித்த பின்னர் 37 வயதுடைய முஹமட் பாக்கித் முஸ்தபா அதனை ஒப்புக் கொண்டார்.
880 முதல் 16 ஆயிரத்து 723 ரிங்கிட் வரையிலான தொகையை உள்ளடக்கி தனது சகோதரியின் வங்கி கணக்கின் மூலம் 19 பண பரிமாற்றங்களும் தனது வங்கி கணக்கில் ஒரு பணப் பரிமாற்றத்தையும் மேற்கொண்டதாக முஹமட் பாக்கித் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வங்கியின் விற்பனை நிர்வாகியாக இருந்த அவர் ஒரு வங்கியுடன் வீட்டு கடன் பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்கு குறிப்புகளைச் சட்ட நிறுவனங்களுக்கு வழங்க உதவுவதற்கு அப்பணத்தைப் கையூட்டாகப் பெற்றுள்ளார்.
ஒரு லட்சம் ரிங்கிட் மேற்போகாத அபராதம் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகைச் செய்யும் 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 25 உட்பிரிவு (1) மற்றும் 2இன் கீழ் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது
இதனிடையே 87 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகை குற்றம் சாட்டப்பட்டவருக்குத் திருப்பி தருவதோடு 210,000 ரிங்கிட் அபராதத்தைச் செலுதத் தவறினால் இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)