புத்ராஜெயா, பிப்ரவரி 02 (பெர்னாமா) -- கோலாலம்பூர் மாநராண்மைக் கழகம், டி.பி.கே.எல்-இன் செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி-இல், ஊழல் மற்றும் அதிகார மீறலுக்கான வாய்ப்புகள் உட்பட கணிசமான பலவீனங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் அடையாளம் கண்டுள்ளது.
நடப்பிலுள்ள நிர்வகிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை நெறிப்படுத்த தெளிவான எஸ்.ஓ.பி-ஐ உடனடியாக சீரமைக்க கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ ஃபட்லூன் மக் உஜூட்டிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
நடப்பிலுள்ள எஸ்.ஓ.பி தெளிவாக இல்லாததோடு, நிர்வாகம் மற்றும் அமலாக்கத்தில் பலவீனங்களை உருவாக்கும் வேளையில், அவற்றை மேம்படுத்துவதற்கான எஸ்.பி.ஆர்.எம்-இன் பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று ஹன்னா கூறுகிறார்.
"மேம்படுத்தப்பட வேண்டிய பல பலவீனங்கள் உள்ளன. பொதுவாக, தெளிவாக இல்லாத எஸ்.ஓ.பி இருக்கும்போது, அந்த சாம்பல் நிறப் பகுதி ஊழலுக்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. எனவே, முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் இருக்கும்போது, அந்த பரிந்துரை சரியானது. அது இனி சாம்பல் நிறப் பகுதி அல்ல, நாங்கள் அதை விரைவாகச் செயல்படுத்துவோம். இது உரிம விண்ணப்ப செயல்முறை என்றும் இது ஒரு அமலாக்க நடவடிக்கை என்றும் மக்களுக்குத் தெரியப்படுத்த விரைவுபடுத்துமாறு டத்தோ பண்டாரை கேட்டுக் கொண்டேன்," என்றார் அவர்.
தவறாகப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு விளக்கங்களுக்கு இனி வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
அதோடு, இதனால் ஊழலுக்கான வாய்ப்புகள் இனி இருக்காது என்றும் அவர் கூறினார்.
புத்ராஜெயாவில் கூட்டரசு பிரதேசத் துறைக்கும் எஸ்.பி.ஆர்.எம்க்கும் இடையிலான ஒத்துழைப்பு அறிக்கையில் கையெழுத்திட்ட பிறகு, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹன்னா யோ அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)