Ad Banner
 பொது

பாடாங் பெசாரில் 100 கிலோ கிராம் எடையிலான 50 லட்சம் ரிங்கிட் போதைப் பொருள் பறிமுதல்

13/02/2026 06:41 PM

கங்கார், பிப்ரவரி 13 (பெர்னாமா) -- கடந்த  திங்கட்கிழமை படாங் பெசாரில் உள்ள பொது நடவடிக்கைப் படையின் கட்டுப்பாட்டுச் சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், ஏறக்குறைய ஐம்பது லட்சம் ரிங்கிட் மதிப்புடைய 100 கிலோ கிராம் ஷாபு வகை போதைப் பொருளை பெர்லிஸ் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இரவு மணி 9 அளவில் உள்நாட்டைச் சேர்ந்த 20 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவை கைப்பற்றப்பட்டதாக பெர்லிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ முஹமாட் அப்துல் ஹலிம் தெரிவித்தார். 

பேராக், உலு கிந்தாவின் முதலாவது பட்டாலியன் படையுடன் இணைந்து பெர்லிஸ் போலீசாரின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
                                      
சந்தேக நபர் ஓட்டிச் சென்ற புரோட்டொன் சாகா ரக காரை சோதனையிட்டபோது, ​​98.73 கிலோ கிராம் எடையுள்ள ஷாபு என சந்தேகிக்கப்படும் தூள் அடங்கிய நான்கு வெள்ளை சாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் மதிப்பு 49 லட்சம் ரிங்கிட் என்று  கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கே பொருட்கள் அனுப்பப்படுவதற்கு முன்னதாக, சந்தேக நபர் மலேசியா- தாய்லாந்து எல்லையான பாடாங் பெசார் மாவட்டத்தில் குறுக்கு வழியைப்  பயன்படுத்தியதாக நம்பப்படுவதாகத் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சோதனையின் போது சந்தேக நபர், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதுடன், பணியிலிருந்த படையினருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்.

இதனால் மேலும் வாகனத்தின் சக்கரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக முஹமாட் விவரித்தார். 

இதனால், அக்கார் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வாகனத்தின் மீது மோதியதில் அவ்வாடவருக்குச் சொற்ப காயம் ஏற்பட்டது.

மேலும், அவ்வாடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் கெட்டாமின் வகைப் போதைப் பொருளை உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், போதைப் பொருள் மற்றும்  கெத்தும் உட்படுத்தி வழக்குகளும் அவர் மீது பதிவாகி இருந்ததாக முஹமாட் கூறினார்.   

பிப்ரவரி 16-ஆம், தேதி அவ்வாடவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார் என்று கூறிய அவர், 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39பி-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)