Ad Banner
Ad Banner
 பொது

சாலை விபத்து மரணத்திற்கு நுண்தூக்கமும் முக்கிய காரணம்

20/02/2026 03:51 PM

ஜாலான் துன் ரசாக், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டில் சாலை விபத்து குறித்த புள்ளிவிவரங்களில், MICRO-SLEEP எனப்படும் நுண்தூக்கம் பிரச்சனை முக்கிய காரணமாக உள்ளது.

சாலை விபத்தை உட்படுத்தி ஆண்டுதோறும் பதிவாகும் மரண சம்பவங்களில் 20 விழுக்காடு நுண்தூக்கத்தை உட்படுத்தியதாகும்.

சோர்வு மற்றும் அலற்சியின் காரணமாகவே ஓட்டுநர்கள் நுண்தூக்கம் பிரச்சனைக்கு இலக்காவதாக, மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு கழகமான MIROS-இன் தலைமை இயக்குநர், இணைப் பேராசிரியர் முனைவர் சித்தி சஹாரா இஷாக் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக, பெருநாள் காலங்களில் நீண்ட பயணம், சாலையில் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது மற்றும் வாகனமோட்டும் முறையில் ஏற்படும் மாற்றங்களும் இதற்கு காரணமாக அமைவதாக அவர் கூறினார்.

''நிலையற்ற முறையில் ஒருவித மயக்கத்தில் வாகனம் ஓட்டும்போது நுண்தூக்கம் ஏற்படுகின்றது. அது திடீரென கண்களை இருள வைக்கும். இத்தகைய பிரச்சனை உடையவர்கள் கண்களை மூடிதான் தூங்குவார்கள் என்று சொல்ல முடியாது. மாறாக கண்கள் திறந்திருந்தவாறே இரண்டு முதல் பத்து வினாடிகளுக்கு சுயநினைவற்ற நிலையில் அவர்கள் காணப்படுவார்கள்,'' என்றார் அவர். 

'நுண்தூக்கத்தால் ஏற்படும் சோர்வை கவனித்து விபத்துகளைக் குறைப்பீர், என்ற தலைப்பில் இன்று பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய Apa Khabar Malaysia கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு கூறினார். 

பெருநாள் காலங்களுடன் இணைந்து பள்ளி விடுமுறையும் வருவதால் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

இதனிடையே, மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் கணிப்புகளின் அடிப்படையில், அக்காலக்கட்டத்தில் நெடுஞ்சாலையில் இருபது லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணிப்பதாக முனைவர் சித்தி சஹாரா இஷாக் தெரிவித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]