Ad Banner
Ad Banner
 உலகம்

ஏ.ஐ அனைவரும் அணுகக்கூடியதாக இருக்க வலியுறுத்து

20/02/2026 04:12 PM

புது டெல்லி, 20 பிப்ரவரி (பெர்னாமா) -- செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ-இன் எதிர்காலத்தை ஒரு சில நாடுகள் தீர்மானித்து விட முடியாது அல்லது ஒரு சில கோடீஸ்வரர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட முடியாது.

மாறாக, இத்தொழில்நுட்பம் அனைவரும் அணுகக்கூடியதாகவும், பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்தோனியோ குட்டெரெஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

''ஏ.ஐ அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். அதனால்தான், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஊக்குவித்தபடி, வளரும் நாடுகளில் அடிப்படைத் திறனை உருவாக்க, திறன், தரவு, மலிவு விலை கணினி சக்தி மற்றும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்றவற்றிற்காக ஏ.ஐ-கான உலகளாவிய நிதியை நான் கோருகிறேன். எங்கள் இலக்கு 300 கோடி அமெரிக்க டாலர். அது ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானது. ஏ.ஐ-ஐ உருவாக்கும் வணிகங்கள் உட்பட, அனைவருக்கும் பயனளிக்கும் ஏ.ஐ பரவலுக்கான ஒரு சிறு தொகை,'' என்றார் அவர். 

புது டெல்லியில் நேற்று நடைபெற்ற ஏ.ஐ தாக்க உச்சநிலை மாநாட்டில் அன்தோனியோ குட்டெரெஸ் உரையாற்றினார்.

உறுப்பு நாடுகள், தொழில்துறை மற்றும் பொது சமூகம் ஆகியவை செயற்கை நுண்ணறிவு தொடர்பான சுயேட்சை அனைத்துலக அறிவியல் குழுவிற்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஜூலை மாதம் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய உரையாடல், முயற்சிகளை ஒருங்கிணைப்பது, மனித உரிமைகளை நிலைநிறுத்துவது, தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது; மற்றும் பொதுவான பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னேறுவது - ஒன்றோடொன்று இயங்குவதற்கான அடித்தளம் ஆகியவற்றில், ஒவ்வொரு நாட்டிற்கும், பங்குதாரருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் தளமாக அமையும் என்றும் குட்டெரெஸ் கூறினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]