லண்டன், 12 பிப்ரவரி (பெர்னாமா) -- இங்கிலாந்தின் முன்னாள் இளவரசரும், அரசர் மூன்றாம் சார்ல்சின் இளைய சகோதரருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், அரசாங்க அலுலவகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் சிறார் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் தொடர்பில் இருந்ததாக வெளியிடப்பட்ட லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 66-வது பிறந்தநாள் அன்று, ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதாக தேம்ஸ் வெலி போலீசார் உறுதிப்படுத்தினர்.
நோர்போக்கின் சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் உள்ள வூட் ஃபார்மில் அதிகாரப்பூர்வ அடையாளம் இல்லாத போலீஸ் வாகனங்களைக் காட்டும் படங்கள் இணையத்தில் பரவலாக வெளியிடப்பட்டன.
அதில், ஆண்ட்ரூவின் வீட்டிற்கு வெளியே சாதாரண உடையில் அதிகாரிகள் கூடி இருந்ததையும் காண முடிந்தது.
ஆண்ட்ரூவுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பெண் ஒருவர் எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட விவகாரத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதோடு, இங்கிலாந்துக்கான வர்த்தக தூதராகப் பதவி வகித்தபோது, எப்ஸ்டீன் உடன் ரகசிய ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
அதில், ஆசிய நாடுகளுக்கான வர்த்தகப் பயணங்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் எப்ஸ்டீன் உடன் பகிர்ந்து கொண்டது அம்பலமானது.
இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், சட்டத்திற்கு யாரும் அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் விசாரணை தொடர அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே, எப்ஸ்டீன் உடனான நெருக்கமான உறவின் காரணமாக கடந்தாண்டில் ஆண்ட்ரூ தமது அரச பட்டத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]