கோலாலம்பூர், 22 பிப்ரவரி (பெர்னாமா) -- பங்கு உரிமை குறித்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி, பிப்ரவரி 19ஆம் தேதி விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் அசாம் பாக்கியை விசாரிப்பதற்காக விசாரணை சிறப்பு செயற்குழு ஒன்று அங்கு கூடியதாக, தேசிய தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பகார் தெரிவித்தார்.
பெறப்பட்டிருக்கும் தொடக்கக் கட்ட அறிக்கையின் அடிப்படையில் பங்குகளின் மீதான அசாமின் உரிமைக்கோரல் மற்றும் ஒழுங்குமுறைத் தன்மை, அச்செயற்குழு ஆராய்ந்து வருவதாகவும் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி தெரிவித்தார்.
மேலும், திரட்டப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களையும் மதிப்பிடும் பணியில் அக்குழு தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், இவ்விசாரணையை நிறைவுப்படுத்த தொடர்புடைய இதர சாட்சிகளும் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் விவரித்தார்.
இதனிடையே, விசாரணையின் முடிவுகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் ஆகியவற்றை உட்படுத்தி நடைமுறையில் உள்ள ஏதேனும் குற்றவியல் சட்டங்கள் அல்லது விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என்றும் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி குறிப்பிட்டார்.
முன்னதாக, எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் தொடர்புடைய பங்கு உரிமைப் பிரச்சினையை விசாரிப்பதற்கான சிறப்பு செயற்குழுவின் தலைவராக தேசிய சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுக்கி மொக்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)