சுங்கை பட்டாணி, ஏப்ரல் 08 (பெர்னாமா) -- ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கிலப் புலமையுடன் எழுத்துக்கூட்டும் திறன், வாசிப்புப் புரிதல், சொல் அகராதி, இலக்கணம் உள்ளிட்ட மொழியியல் பயன்பாடுகளில் தனிச்சிறப்பை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ISLO எனப்படும் அனைத்துலக எழுத்துக்கூட்டுதல், மொழியியல் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இம்முறை நடைபெற்ற இப்போட்டியில் கெடா, சுங்கை பட்டாணி பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவி மகாம்பிகை உமாசங்கர் பங்கேற்று இரட்டைப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 5 முதல் 8-ஆம் தேதி வரையில் சிங்கப்பூர் ‘டி மார்கி’ (D’Marquee) அரங்கில் நடைபெற்ற அப்போட்டியில் ISLO-வில் வெண்கலப் பதக்கத்தை மாணவி மகாம்பிகை வென்றார்.
மற்றொரு போட்டியான GELOSEA எனப்படும், தென்கிழக்காசியாவின் உலகளாவிய ஆங்கில மொழி ஒலிம்பியாட் போட்டியிலும் அவர் கலந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
"ஆசிரியர் மேகலா தேவி இப்போட்டியை எனக்கு அறிமுகப்படுத்தினார். இதற்கு தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் நான் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தேன். அதனால் அனைத்துலகப் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போட்டியின் மூலமாக எனக்குப் பல புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்ததுடன் பல நாடுகளின் கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது," என்றார் அவர்.
விடாமுயற்சியும் பயிற்சியும் இருந்தால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளவில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டலாம் என்றும் மகாம்பிகை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)