புத்ராஜெயா, 04 ஏப்ரல் (பெர்னாமா) -- மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தைச் செலுத்தும் ஓட்டுநர்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில், சட்டம் 333 அல்லது 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் உள்ள சில செக்ஷன்களின் மீது, சாலைப் போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே ஆய்வு மற்றும் பரிசீலனையைத் தொடங்கியுள்ளது.
ஜே.பி.ஜே தனது சட்டப் பிரிவின் மூலம், 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், செக்ஷன் 44 மற்றும் 45 மீது, பகுப்பாய்வு மற்றும் பரிசீலிப்பைத் தொடங்கியிருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் போக்குவரத்து அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு முன்னர், அந்த செயல்முறை முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
"அக்குற்றத்திற்கான தண்டனை உண்மையில் 2022-ல் திருத்தம் செய்யப்பட்டது. செக்ஷன் 44 மற்றும் 45-இன் சட்ட மசோதாக்களில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, முன்பு 10 ஆண்டுகளுக்கும் குறைவான அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 5 லட்சம் ரிங்கிட் அபராதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தண்டனை கடுமையாக இருந்தபோதிலும், அது இன்னும் வலுவானதாக இல்லை என்றே நாங்கள் பார்க்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஏடி ஃபட்லி அவ்வாறு தெரிவித்தார்.
மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டு, வாகனம் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஜேபிஜே மேலும் தீவிரமான ஒரு பரப்புரைத் திட்டத்தைத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)