Ad Banner
Ad Banner
 உலகம்

பாகிஸ்தானில் டீசல் & பெட்ரோல் விலை கடுமையாக உயர்வு

03/04/2026 05:13 PM

லாகூர், 03 ஏப்ரல் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் அந்நாட்டில் எரிவாயுவின் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது.

ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக டீசல் மற்றும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால், பயனீட்டாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஈரான் மீதான அமெரிக்க போரினால் உலக சந்தை விலை கட்டுப்பாட்டை மீறி உயர்ந்துள்ளதால், நாட்டின் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர்க்க இயலவில்லை என்று பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களில் பாகிஸ்தான் அரசாங்கம் 12,900 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கியிருப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், அனைத்துலக எண்ணெய் விலை உயர்வு காரணமாக இனி அதை வழங்க இயலாது எனவும் மாலிக் கூறினார்.

இந்நிலையில், விலை உயர்வு ஓர் அநீதி என்றும், அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக, அரசாங்கமே அதில் ஒரு பகுதியை ஏற்றிருக்க வேண்டும் என்றும் மக்களில் பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

''மக்கள் பெட்ரோலை 460 ரூபாய்க்கு வாங்க நேர்ந்தால், வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உணவளிப்பார்கள்? தங்கள் குடும்பச் செலவுகளை எப்படிச் சமாளிப்பார்கள்? வாடகை வீட்டில் வசித்தால், வாடகையை எப்படிச் செலுத்துவார்கள்? இது பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மக்கள் சுரண்டப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக, அரசாங்கமே அதில் ஒரு பகுதியை ஏற்றிருக்க வேண்டும்,'' என்று பயனீட்டாளர் ஒருவர் அதிருப்தி தெரிவித்தார்.

ஒரு லிட்டர் டீசலின் விலை 54.9 விழுக்காடு உயர்ந்து 7 ரிங்கிட் 53 சென்னாகவும், பெட்ரோல் விலை 42.7 விழுக்காடு உயர்ந்து 6 ரிங்கிட் 63 சென்னாகவும் விற்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)