நய்பிடாவ், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- மியன்மார் தனது அனைத்துலக உறவுகளையும், தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பான ஆசியானுடனான உறவுகளையும் மேம்படுத்த முயலும் என்றும் அதன் புதிய அதிபர் மின் ஆங் லைங் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தமது புதிய தலைமைத்துவம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய கவனம் செலுத்தும் என்று அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்ற போது அவர் கூறினார்.
''நாங்கள் அனைத்துலக உறவுகளை மேம்படுத்துவோம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்ப்போம். நாங்கள் ஆசியான் அமைப்பில் ஓர் உறுப்பு நாடு என்பதால், அதனுடன் இயல்பான உறவுகளை மீட்டெடுக்கப் பாடுபடுவோம்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமது பதவியேற்பு உரையில் மின் ஆங் லைங் அவ்வாறு கூறினார்.
தமது தலைமையிலான புதிய அரசாங்கம் கடக்க வேண்டிய பல சவால்கள் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
தமது அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்து, விவசாயத்தை மேம்படுத்தி, பயனுள்ள நீண்டகால வியூகத் திட்டங்களை வகுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மின் ஆங் லைங் அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)