Ad Banner
Ad Banner
 பொது

டீசல் மூன்று மடங்கு விலையேற்றம்; பரிதவிப்பில் கனரக வாகன ஓட்டுநர்கள்

10/04/2026 06:52 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 10 (பெர்னாமா) -- கடந்த சில மாதங்களில் எரிபொருள் குறிப்பாக டீசல் விலை மும்மடங்காக அதிகரித்திருப்பது பல்வேறு துறைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

போக்குவரத்து சேவையை வழங்கும் தங்கள் தரப்பிற்கு, இரண்டாவது உதவித் தொகை வழங்கப்பட்ட டீசல் கட்டுப்பாட்டு செயல்முறையின் கீழ்...

டீசல் இன்னும் முறையாக விநியோகிக்கப்படாததால், மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக லாரி நிறுவன உரிமையாளர்கள் சார்பில் பேசிய  தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் தொட்டி சேவையாளர் இளங்கோவன் கெங்கன் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக மண் வாரி இயந்திரங்கள், செம்மண் லாரிகள், இழுவை வாகனங்கள் ஆகியவற்றுடன் தொழிற்சாலை பேருந்துகளும் வேன்களும் பெரும் இன்னலை எதிர்நோக்கி வருவதாக அவர் கூறினார்.

அதிலும் உட்புறப் பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் செயல்படும் மண்வாரி இயந்திரங்கள் டீசலை கலன்களில் வாங்கி நிரப்ப முடியாது போன்ற புதிய நிபந்தனைகள், சவாலுக்கு மேல் சவாலாக உள்ளதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டார்.

டீசல் கடத்தலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு தாங்கள் மாற்றுக் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் உட்புறப்பகுதிகளிலும் வேலை செய்பவர்களின் தேவைக்கு இத்தகைய நடவடிக்கை இடையூறாக உள்ளது என்பதே தங்களின் ஆதங்கம் என்றும் இளங்கோவன் குறிப்பிட்டார்.

அவற்றுடன், டீசல் விலையேற்றத்தால் வாகனங்களின் உபரிப் பாகங்களும் தற்போது விலையேற்றம் கண்டுள்ளதால் அதன் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்ட முடியாமல் பல போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள் தத்தளித்து வருகின்றனர்.

எனவே, பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்களின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு சமசீரான தீர்வுகளை விரைவில் முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை தாம் கேட்டுக் கொள்வதாக பினாங்கு, நிபோங் திபாலைச் சேர்ந்த இளங்கோவன் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)