Ad Banner
 சிறப்புச் செய்தி

தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர்களுக்கான பாராட்டு விழா

07/04/2026 05:15 PM

செபராங் ஜெயா , ஏப்ரல் 07 (பெர்னாமா) -- தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர்களை சிறப்பிக்கும் விதமாக, மலேசியக் கல்விக்கோன் கல்வி மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் பாராட்டு விழா அண்மையில் பினாங்கு செபராங் ஜெயா நடைபெற்றது.

தாய்மொழிக்காக நடத்தப்படும் இதுபோன்ற பாராட்டு விழாகள் தமிழ்க்கல்வியின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று பினாங்கு மாநிலத்தின் வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எஸ்.சுந்தரராஜூ தெரிவித்தார்.

மொழியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும், பாராட்டு விழாக்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் எனபிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ எஸ்.சுந்தரராஜூ ஆலோசனை வழங்கினார்.

அதோடு, தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தமிழ்க் கல்வியைப் பாதுகாக்க சமூகத்தின் ஒற்றுமையும் ஆதரவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கல்விக் கழக தமிழ் விரிவுரையாளர்கள், தொழில் கல்வி கல்லூரி விரிவுரையாளர்கள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், சுமார் 40 ஆண்டுகளாக மேடைகளில் தன்முணைப்பு பயிற்சிகள் வழி தமிழ் மொழியை வளர்த்தவர்கள் என்று பலர் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

இதில், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு இணைப்பேராசிரியர் மனோன்மணி தேவி அண்ணாமலை உட்பட , மொத்தம் 10 பிரிவுகளில் 50 பேருக்கு சிறப்பு விருதுகளும் பாராட்டு சாற்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதனிடையே, இனத்தின் வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது என மலேசிய கல்விக்கோன் கல்வி மேம்பாட்டு அமைப்பின் தலைவர் தி.எஸ் முனைவர் வேலாயுதம் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)