Ad Banner
Ad Banner
 பொது

அமெரிக்கா- ஈரான் போர் நிறுத்தம்; அண்மைய முன்னேற்றம் வரவேற்ககூடியது - பிரதமர்

08/04/2026 05:27 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 08 (பெர்னாமா) -- அமெரிக்கா- ஈரான் மோதலில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றத்தை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முழு மனதுடன் வரவேற்றுள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் அமைதியையும் நிலைத்தன்மையையும் மீட்டெடுப்பதற்கான ஒரு நேர்மறையான முயற்சி இதுவென்றும் அவர் விவரித்தார்.

ஈரான் பரிந்துரைத்த பத்து அம்ச பரிந்துரை மீதான பேச்சுவார்த்தைகள் நல்லெண்ணத்துடன் நடத்தப்படும் என்ற நம்பிக்கையையும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளிப்படுத்தினார்.

அதோடு, நீடித்த அமைதி பெற வேண்டுமெனில் நேர்மையான, உறுதியான அர்ப்பணிப்பு அவசியம் என்றும், வன்மம் அல்லது இரட்டை நிலைப்பாடு இருந்தால் அது வெற்றியடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்

மேலும், இந்தப் பத்து அம்ச பரிந்துரை, ஈரானுக்கு மட்டுமல்லாமல், ஈராக், லெபனான் மற்றும் யேமன் உள்ளிட்ட பிற பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் ஒரு விரிவான அமைதி ஒப்பந்தமாக மாற்றப்படுவது அவசியம் எனவும் தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில், அன்வார் தெரிவித்தார்.

குறிப்பாக காசாவில், பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் நிலப்பறிப்பை முடிவுக்குக் கொண்டு வருவது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பு என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்த பேச்சுவார்த்தைன் முயற்சிகளை துணிச்சலுடன் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் மற்றும் அவரின் அரசுக்கும் அன்வார் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இதனிடையே, அமெரிக்கா - ஈரான் இடையிலான இரண்டு வாரக் கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை மலேசியா வரவேற்கிறது.

இந்த முன்னேற்றம், மேற்கு ஆசிய வட்டாரத்தில் பதற்றங்களைத் தணிப்பதற்கும், மிகவும் தேவையான அமைதியையும் நிலைத்தன்மையையும் மீட்டெடுப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்று வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.

நீடித்த மோதலைத் தவிர்ப்பதற்காக, அனைத்துத் தரப்பினரும் போர் நிறுத்தத்தின் விதிமுறைகளை முழுமையாக மதித்துச் செயல்படுத்த வேண்டும் என்று மலேசியா வலியுறுத்தியது.

மேலும், உலகப் பொருளாதார மற்றும் எரிசக்தி நிலைத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எந்தவொரு சினமூட்டும் நடவடிக்கைகளையும் அனைத்துத் தரப்பினரும் தவிர்ப்பதும் அவசியம்.

-- பெர்னாமா

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)