ஈப்போ, ஏப்ரல் 08 (பெர்னாமா) -- சுமார் 50 லட்சம் ரிங்கிட் கையூட்டு கேட்டு, பெற்றது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக, நாட்டின் வடப் பகுதியில் உள்ள ஒரு தனியார் உயர்க்கல்வி கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்கள் உட்பட நால்வர், நான்கு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் செய்த விண்ணப்பத்திற்கு அனுமதியளித்து, மாஜிஸ்திரேட் எஸ்.புனிதா, அவர்கள் அனைவரையும் ஏப்ரல் 11-ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இன்று காலை மணி 10.05-க்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் அனைவரும், 11.45-க்கு நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர்.
நேற்று, செவ்வாய்க்கிழமை பிற்பகல் மணி 2 முதல் மாலை மணி 5-க்குள் பேராக் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில்,
40 வயதிற்குட்பட்ட ஓர் எண்ணெய் நிறுவன அதிகாரி மற்றும் ஒரு பொறியியல் நிறுவன இயக்குநரும் சம்பந்தப்பட்டுள்ளதாக நேற்று பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
பல்வேறு நிறுவனங்களுக்கு ஆராய்ச்சித் திட்டங்களைப் பெற்றுத் தருவதற்காக இப்பணம் கையூட்டாக வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேலும், இதில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதும் அடங்கும்.
இக்கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, 85 லட்சம் ரிங்கிட் மொத்த இருப்பு கொண்ட 70 வங்கிக் கணக்குகளை எஸ்.பி.ஆர்.எம் முடக்கியதுடன், அடுத்தக்கட்ட விசாரணைக்கு உதவும் வகையில், ஏழு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம், செக்ஷன் 16 உட்பிரிவு (a)(A)- இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)