ஈப்போ, ஏப்ரல் 08 (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை பேராக், புந்தோங்கில் ஆடவர் ஒருவர் கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்தது தொடர்பிலான விசாரணைக்கு உதவும் வகையில், உள்நாட்டைச் சேர்ந்த மூவர் இரண்டு நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
24 முதல் 34 வயதிற்குட்பட்ட அவர்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் எஸ். புனிதா இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிறப்பித்தார்.
நேற்று மாலை மணி 5.30 அளவில், புந்தோங் பொதுச் சந்தையில் அம்மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான தடுப்புக் காவல் விண்ணப்பம் வியாழக்கிழமை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் நஜிப் ஹம்சா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் நண்பர்களில் ஒருவர் அரசாங்க மருத்துவமனையிலும், மற்றொருவர் தனியார் மருத்துவமனையிலும் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவ்விருவரின் உடல்நிலையும் சீராக இருந்தாலும் இன்னும் வலுவற்ற நிலையிலே காணப்படுகின்றனர்.
ஒரு தவறான புரிதலின் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது தொடக்கக்கட்ட விசாரணையில் அறிய வந்தாலும், இது குறித்த விரிவான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முதல் ஒரு வாரத்திற்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய மற்றொரு சந்தேக நபரும் இவ்விவகாரத்தில் அடங்குவார்.
இதனிடையே, குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையிலான மோதலுடன் மட்டுமே இச்சம்பவம் தொடர்புடையதாகவும், மாறாக, இனப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது அல்ல என்றும் நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)