Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

நலமே வாழ்வு

08/04/2026 08:00 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 08 (பெர்னாமா) -- பரபரப்பான வாழ்க்கை முறையாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமானது.

உடற்பயிற்சி செய்வது, உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது போன்ற ஆரோக்கியம் தொடர்பான பழக்கங்களை இந்திய இளைஞர்கள் உட்பட இளம் வயதினர் அதிகம் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதனை அனைத்து வயதினரும் பின்பற்றினால், நோய்கள் எளிதில் அணுகாது, ஆரோக்கியமான, சுறுசுறுப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்று மலேசிய தேசிய புற்றுநோய் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் முரளிதரன் முனுசாமி தெரிவித்தார்.

''உடலை பாதுகாப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில நடவடிக்கைகளை இளைஞர்கள் பின்பற்றி வருகின்றனர். இது, 30 வயதில் இருந்து 50 வயதிற்குட்பட்டவர்கள் மத்திய சற்று குறைவாகவே உள்ளது. இவர்கள்தான் ஆபத்தான நிலையில் இருக்கக்கூடிய பிரிவினர்,'' என்றார் அவர்.

உடல் எடையை சீராக வைத்திருப்பது உட்பட உடலையும் மனதையும் நலமுடன் பாதுகாக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர்.

ஆனால், அவர்களது பெற்றோர்கள் குடும்பம், வேலை, வாழ்க்கைச் செலவினம் ஆகியவற்றில் அதிக நேரத்தை செலவிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறுகின்றனர் என்பதை டாக்டர் முரளிதரன் முனுசாமி சுட்டிக் காட்டினார்.

அதுமட்டுமின்றி, ஐம்பது வயதிற்கும் மேற்பட்டோர், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் சமூக வலைத்தளத்தை அதிகம் சார்த்திருப்பதை அவர் உதாரணத்துடன் விளக்கினார்.

மற்றொரு நிலவரத்தில், நிறைய புது நோய்கள் உருவாகின்றதை மறுக்க முடியாது.

அதே வேளையில், அதற்கான சிகிச்சை முறைகளும் மலேசியாவில் வளர்ச்சிக் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, சுகாதாரத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

''இப்போது விழிப்புணர்வுடன் பரிசோதனைகள் மேற்கொண்டு நோய்களைக் கண்டறிந்து கொள்கின்றனர். இந்திய சமுதாயத்தில் பலர் வியாதிகள் அதிகரிப்பதாக கருதுகின்றனர். ஆனால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்தில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தொழில்நுட்பமும் முன்னேற்றம் அடைவதால், நோய்கள் அதிகரிக்கின்ற மாதிரி சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.,'' என்றார் அவர்.

இணையம், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் வழி நோய்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தானாகவே கண்டறிவதை குறைத்து, நேரடியாக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, அண்மையில் பெர்னாமாவின் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பகிர்ந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)