வாஷிங்டன், ஏப்ரல் 08 (பெர்னாமா) --ஈரான் மீதான தாக்குதல்களை, இரண்டு வாரக் காலத்திற்கு போர் நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், தமது Truth Social தளத்தில் அறிவித்துள்ளார்.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்த பாகிஸ்தான் தலைவர்களுடன் தாம் பேசியபோது, இரண்டு வாரங்களுக்கான தற்காலிக போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் முன்மொழிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் செரிஃப் மற்றும் அந்நாட்டின் படைத் தளபதி அசிம் முனிர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், அவர்களின் கோரிக்கை இணங்க, இப்போரை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதோடு, இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிடமிருந்து 10 அம்ச பரிந்துரையை அமெரிக்கா பெற்றுள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது ஒரு சாத்தியமான அடிப்படை என்று நம்புவதாகவும் டிரம்ப் கூறினார்.
லெபனான் உட்பட அனைத்து மோதல் பகுதிகளிலும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய ஈரான், அமெரிக்கா மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் செரிஃப் இன்று உறுதிப்படுத்தினார்.
இந்த விவேகமான முடிவை வரவேற்பாத கூறிய அவர், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு, உறுதியான உடன்படிக்கையை எட்டுவதற்கு, தங்களின் பேராளர்களை, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இஸ்லாமாபாத்திற்கு அழைப்பதாக, Sharif தமது X பதிவில் கூறியுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது.
ஆனால், இப்போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்காது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
தெஹ்ரான் உடனடியாக ஹோர்மொஸ் நீரிணையைத் திறந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வட்டார நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தினால், அமெரிக்காவின் இந்நடவடிக்கையை இஸ்ரேல் ஆதரிக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)