புத்ராஜெயா, ஏப்ரல் 09 (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியலின் நிச்சயமற்ற தன்மைகளைத் தொடர்ந்து பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உதவித்தொகை திட்டம் மூலம் எரிபொருளைத் தொடர்ந்து வழங்குவதில் அரசாங்கம் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு, MTEN மூலம் உறுதியாக உள்ளது.
பொருள்களை அனுப்புவதற்கான செலவு திடீரென அதிகரித்து மக்களுக்கு சுமையாக மாறுவதைத் தடுப்பதற்கு இந்நடவடிக்கை அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடி, நாட்டின் போக்குவரத்துத் துறையில் குறிப்பாக போக்குவரத்து விநியோகச் சங்கிலி மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக அந்தோணி லோக் விவரித்தார்.
"ஹோர்முஸ், சூயஸ் நீரிணைகள் மற்றும் செங்கடல் பகுதி போன்ற வியூக வழித்தடங்களில் நிலவும் பதற்றங்கள், வர்த்தகக் கப்பல்களை ஆப்பிரிக்காவில் உள்ள தஞ்சோங் ஹராப்பான் முனை வழியாக மாற்று வழிகளில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றுப் பாதை, கடற்பரப்பில் செலவிடும் நேரத்தை 10 முதல் 15 நாட்கள் வரை நீட்டிப்பதால், கப்பல் பயன்பாட்டின் செயல்திறனைக் குறைத்து, செலவுகளை அதிகரிக்கிறது," என்றார் அவர்.
மேலும், மலேசியா ஒரு வட்டார போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து மையமாகத் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள இந்த நெருக்கடி வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் விவரித்தார்.
வியாழக்கிழமை புத்ராஜயாவில், போக்குவரத்து அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் அந்தோணி லோக் உரையாற்றினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)