Ad Banner
Ad Banner
 பொது

4 வயது சிறுமியைத் துன்புறுத்தியதாக பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

10/04/2026 06:28 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 10 (பெர்னாமா) -- நான்கு வயது சிறுமிக்கு உடலில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு அவளை துன்புறுத்தியதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, அச்சிறுமியின் பராமரிப்பாளரும் அவரின் தாயாரும், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.

இவ்வாண்டு பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை, கோலாலம்பூர், ஜாலான் பூடு இம்பியானில் உள்ள தங்கள் வீட்டில், அச்சிறுமியின் தொடை மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் காயம் ஏற்படும் அளவிற்கு அவளை துன்புறுத்தியதாக, ஏ.சரண்யா மற்றும் ஆர்.சரோஜா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20,000 ரிங்கிட் அல்லது அதிகபட்சம் பத்தாண்டுகள் சிறை அல்லது அவ்விரண்டையும் விதிக்க வகை செய்யும், 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம் செக்ஷன் 31 (1)(a) உடன் வாசிக்கப்பட்ட குற்றவியல் சட்டம் செக்ஷன் 34-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவ்விருவரையும் தலா 15,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் உத்தரவாதத்தில் விடுவித்த நீதிபதி மசுலியானா அப்துல் ரஷிட், ஆவண சமர்ப்பிப்பிற்காக இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)