Ad Banner
Ad Banner
 பொது

IPPTAR ஏற்பாட்டில் இந்திய ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை

12/04/2026 08:22 PM

ஜார்ஜ்டவுன், 12 ஏப்ரல் (பெர்னாமா) --  உலகில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் இலக்கவியல் மற்றும் ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டையும் சவால்களையும் எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்களைத் மேம்படுத்தும் நோக்கில், இவ்வாண்டு முழுவதும் சுமார் 110 சிறப்பு பயிற்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான IPPTAR திட்டமிட்டுள்ளது.

அதில் ஒரு பகுதியாக தமிழ் ஊடகங்களின் மூலம் கருத்து உருவாக்கம் மற்றும் நற்பெயர் மேம்பாடு எனும் பயிற்சியை IPPTAR இரண்டாவது ஆண்டாக ஏற்று நடத்தியது.

ஏப்ரல் 8 தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற்ற இப்பயிற்சி, ஊடகவியலாளர்களின் பங்கு, இலக்கவியல் ஊடகம் உட்பட இலக்கவியல் ஊடக சவால்களை எதிர்கொள்ளுதல் மற்றும் எதிர்கால தயார்நிலை என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது.

போலிச் செய்திகளின் பரவல் மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் ஊடகத் துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப பயிற்சியில் போதிக்கப்படும் பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, IPPTAR-இன் இயக்குநர் டத்தோ ரொஸ்லான் அரிஃபின் கூறினார்.

''இன்றைய காலகட்டத்தில், ஊடகத்தின் சவால்கள் அதிகரித்துள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் மூலம் நாம் அதை காண்கின்றோம். இது தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். பிரச்சனை என்னவென்றால், முறையாக உரிமம் இல்லாத ஊடகங்கள், அங்கீகாரம் பெற்ற நிருபர் அல்லது ஊடகவியலாளர்களாக முயற்சி செய்கின்றனர். ஆனால், அது அதிகமான போலிச் செய்திகள் பரவுவதற்கு வழிவகுக்கின்றது'', என்றார் அவர்.

2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இவ்வாண்டு IPPTAR ஏற்று நடத்தும் பயிற்சிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், அதன் மூலம் சுமார் 20,000 பங்கேற்பாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், ஊடக துறையின் எதிர்காலம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்த விரிவான அறிமுகத்தை, இந்திய ஊடகவியலாளர்களுக்கு இப்பயிற்சி வழங்குவதாக, தொடர்பு அமைச்சின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பிரிவு துணைத் தலைமைச் செயலாளர் மனோ வீரபத்ரன் கூறினார்.

''தற்போது ஊடகத் துறை பல புதுமைகளைக் கண்டறிந்து விட்டது. நாளிதழ் வாசித்த காலம் முடிந்து இலக்கவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் காலம் மாறிவிட்டது. எனவே, இதுபோன்ற பயிற்சிகளின் மூலம் ஊடகவியலாளர்களை மேம்படுத்தி முறையான வழியில் மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் IPPTAR இப்பயிற்சியை நடத்துகின்றது. இது முற்றிலும், இந்திய ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்படுகின்றது'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, இப்பயிற்சியில் பங்கேற்ற சிலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

''கையடக்க கருவிகளை வைத்திருப்பவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்களாக மாறிவிட முடியாது என்பதற்கான உறுதுணையாக நாம் நிற்க வேண்டும் என்றால் அதற்கு எம்மாதிரியான முயற்சிகளைச் செய்யலாம். எவ்வாறு தனித்து செயல்படுவது ஆகியவற்றை நாங்கள் இப்பயிற்சியில் கற்றுக் கொண்டோம்'', என்று THR Raaga செய்தி வாசிப்பாளர் கிஷேந்திரன் முனியாண்டி கூறினார்.

''இந்த பயிற்சியில் நிறைய அனுபவங்கள் மற்றும் ஓர் ஊடகவியலாளர் எவ்வாறு ஒரு செய்தியை முறையாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை பயிற்சி வழங்கியவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்'', என்றார் திசைகள் செய்தி நிருபர் ஹெமாநந்தினி சுப்ரமணியம்.

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் 24 ஊடகவியலாளர்கள் பங்கேற்ற இம்மூன்று நாள் பயிற்சியில், ஆர்.டி.எம் தொலைக்காட்சியின் ஆங்கில செய்தி வாசிப்பாளர் முனைவர் மோகனப்பிரியா சின்னராஜா மற்றும் வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி ஆகியோர் வழிநடத்தினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)