Ad Banner
Ad Banner
 பொது

பி.டி.ஆர்: உற்பத்தித்திறன் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கக்கூடாது

13/04/2026 04:41 PM

புத்ராஜெயா, 13 ஏப்ரல் (பெர்னாமா) -- வரும் புதன்கிழமை தொடங்கி அமலுக்கு வரும் வீட்டிலிருந்து பணிபுரியும், பி.டி.ஆர்  உத்தரவு, பொது சேவை துறை ஊழியர்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கக்கூடாது.

தளர்வான வேலை முறையில் பணிபுரியும்போதும், பணி இலக்குகளும் கே.பி.ஐ எனப்படும் முதன்மை செயல்திறன் குறியீடும் அடையப்படுவதை உறுதிசெய்யும் கடப்பாட்டை பொது சேவை துறை ஊழியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அவாங் அலிக் ஜெமான் வலியுறுத்தினார். 

''வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைத்தால், நாம் வேலையைத் தவிர்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் படங்களையோ அல்லது பதிவுகளையோ சமூக ஊடகங்களில் பதிவேற்ற வேண்டாம். பூப்பந்து விளையாடும்போது பதிவேற்றுவது, பேரங்காடிக்கு வருகை புரிந்திருப்பதைப் பதிவேற்றுவது போன்றவை. ஏனெனில், இப்படி நடந்தால், நான் உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எனவே, நான் முன்பே சொல்லிவிட்டேன், உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதீர்கள். நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்,'' என்று அவர் கூறினார்.

பி.டி.ஆர்  அமல்படுத்தப்படும் காலகட்டம் முழுவதும், மக்களுக்கான சேவை தடையின்றி சீராக நடைபெற வேண்டும் என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது டாக்டர் அவாங் கூறினார்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, செலவுகளைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமைச்சுகள், நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களை உள்ளடக்கிய பி.டி.ஆர் கொள்கையை வரும் புதன்கிழமை தொடங்கி அமல்படுத்த அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஏப்ரல் முதலாம் தேதி அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)