கோத்தா பாரு, 13 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்று கோத்தா பாரு, தஞ்சோங் மாஸ் தேசிய இடைநிலைப்பள்ளியின் சூராவ் முன்புறம் நிகழ்ந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவ, 57 வயதுடைய ஆசிரியை இரு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 41 (1)-இன் கீழ் விசாரணையை மேற்கொள்ளும் வகையில், இன்று தொடங்கும் இத்தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் வான் முஹமாட் இசாட் வான் அப்துல்லா பிறப்பித்தார்.
நேற்று பிற்பகல் மணி 1.50-க்கு, சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியைச் செலுத்திய காரால் மோதப்பட்டதாக நம்பப்படும் 13 வயது நூர் ஃபாதிமாதுல் ஹவா முஹமட் அசஔடின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாகனம் தடம் புரண்டு, அம்மாணவி மீது மோதுவதற்கு முன்னதாக, அதன் ஓட்டுநர் தவறுதலாக எண்ணெய்யை அழுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முஹமட் அஸ்மிர் டாமிரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் படுகாயங்களுக்கு ஆளான மேலும் ஒரு மாணவர் தற்போது ராஜா பெரும்புவான் சைனாப் II மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்த மாணவி தற்போது சீரான நிலையில் இருப்பதாக கிளந்தான் மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் முஹமட் அஸ்மான் யாக்கோப் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தொடக்கக்கட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவருக்குத் தலையிலும் முகத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் தற்போது சுயநினைவுடனும், சீரான நிலையிலும் இருப்பதாகக் கூறினார்.
இவ்வழக்கு இன்னும் போலீசாரின் விசாரணையில் உள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பாக வதந்திகளையோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்று கிளந்தான் மாநில சுகாதாரத் துறை அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)