காஜாங், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- தமிழர் பாரம்பரியத்தின் முக்கியத் தொடக்கமாகக் கருதப்படும் சித்திரை புத்தாண்டு, இன்று உலகம் முழுவதும் வரவேற்கப்பட்டு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
மங்களரமான இந்நாளை வரவேற்கும் விதமாக அதிகாலை முதலே ஆலயங்களுக்குச் சென்று, இறைவனை தரிசித்து, புதிய தொடக்கத்திற்கான ஆசீர்வாதத்தை மக்கள் பெற்று வருகின்றனர்.
அவ்வகையில், சிலாங்கூர், காஜாங், ஆதிமூல ராஜ ராஜேஸ்வரி ஶ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானத்திற்கு சென்று, பராபவ புத்தாண்டில் தங்களின் தீர்மானங்களையும் எதிர்பார்ப்புகளையும், மக்கள் சிலரிடம் பெர்னாமா செய்திகள் கேட்டறிந்தது.
பராபவ என்பது தமிழ் நாள்காட்டியில் 60‑ஆண்டுகள் கொண்ட சுழற்சியின் நான்காவது ஆண்டாகும்.
இது நிறைவு மற்றும் நிலையான முன்னேற்றத்துடன் தொடர்புடையது எனவும் பஞ்சாங்கத்தில் கூறப்படுகின்றது.
இப்புதிய ஆண்டு, பொதுவாக நிதி, சொத்து முதலீடு மற்றும் குடும்பங்களில் சுபகாரியங்களுடன் சீரான வளர்ச்சியை வழங்கும் என்றாலும், வரவுக்கு மீறிய செலவிருக்கும் என்பதால், சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு ஆதிமூல ராஜ ராஜேஸ்வரி ஶ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானத்தின் தலைமை குருக்கள் சிவஶ்ரீ அன்பரசன் குருக்கள் தெரிவித்தார்.
இதனிடையே, சமூக ஒற்றுமையையும் குடும்ப இணைப்பையும் வலுப்படுத்தும் இப்புத்தாண்டில் தலைமுறைகள் கடந்தும் பாரம்பரியத்தைக் காக்கும் நோக்கத்துடன் ஆலயத் தரப்பினர் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் சுப்ரமணியம் வேலாயுதம் கூறினார்.
பக்தி, பாரம்பரியம் மற்றும் புதிய நம்பிக்கையுடன், அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பை இப்புத்தாண்டு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]