Ad Banner
 

நேர்மறையான வளர்ச்சியை மலேசியா தொடர்ந்து பதிவு செய்யலாம்

20/04/2026 05:38 PM

புத்ராஜெயா, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து கருத்துரைத்த பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர், இவ்வாண்டும் நேர்மறையான வளர்ச்சியை மலேசியா தொடர்ந்து பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

இருப்பினும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக நாடு விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் அவர் உணர்த்தினார்.

"2026-ஆம் ஆண்டில் நாம் நேர்மறையான சிந்தனையில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மலேசியாவைப் பொறுத்தவரை, வேறு சில இடங்களுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட மீள்திறனைக் கொண்டிருப்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரத்தில், நம்மிடம் இருப்பதைப் பற்றி நாம் மிகவும் மனநிறைவுடன் இருந்தால், அது நாம் ஏற்கனவே கட்டியெழுப்பிய எந்த வலிமையையும் பாதிக்கலாம். அதனால்தான் இந்தச் செயல்முறை தொடர வேண்டும். அந்தத் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாங்கள் முயற்சி செய்கிறோம்," என்றார் அவர். 

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.4 விழுக்காடாக இருந்த பணவீக்க விகிதம், மார்ச் மாதத்தில் 1.7 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், எரிசக்தி மற்றும் அடிப்படை மூலப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள், விரிவான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவாதகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், அரசாங்கத்தால் இதுவரை செயல்படுத்தப்பட்ட பல கொள்கைகள் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்த உதவியுள்ளன என்றும் அக்மால் நஸ்ருல்லா தெரிவித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]