முன்ஷிகஞ்ச், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- மத்திய வங்காளதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்துக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான லால் கச் எனும் திருவிழாவில் சிவபெருமான் போன்று வேடமிட்டு வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
உடல் முழுவதிலும் சிவப்பு வண்ணம் பூசி, இசைக்கருவிகள் முழக்கத்திற்கு மத்தியில் வானத்தை நோக்கி வாள்களை உயர்த்தியபடி முன்ஷிகஞ்ச் கிராமத்தின் தெருக்களில் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
வங்காள நாள்காட்டியின் இறுதி நாளான சித்திரை சங்கராந்தியைக் குறிக்கும் வருடாந்திர லால் கச் திருவிழா ஒரு சிறந்த புத்தாண்டுக்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
பல நூற்றாண்டுகள் பழமையான இவ்விழாவில், இந்து கடவுளான சிவன் பார்வதி போற்றப்படுவதோடு, சிவப்பு நிறமே சிவனின் படையின் நிறம் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
அச்சமூகத்தினரின் நம்பிக்கையின்படி, புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பு எதிர்மறை சக்திகளை விரட்டுவதற்காக, சிவபெருமான் தெய்வீக வீரர்களுடன் பூமிக்கு இறங்கி வருவதை இந்தச் சடங்குக் காட்டுகிறது.
இக்கொண்டாட்டம் அக்கிராம மக்களைக் கவர்ந்ததோடு, ஊர்வலத்தைக் காண முஸ்லிம் மற்றும் இந்து கிராமவாசிகள் தெருக்களின் இருபுறமும் வரிசையாக காத்திருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)