Ad Banner
 உலகம்

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் - டிரம்ப்

16/04/2026 05:30 PM

வாஷிங்டன், 16 ஏப்ரல் (பெர்னாமா) --  ஈரான் துறைமுகங்களிலிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டுத் திருப்பி அனுப்பிய நிலையில், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கோடி காட்டியுள்ளார்.

''நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது முடிந்தவுடன், இதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் வெளிப்படும். இது மிக விரைவில் முடிந்துவிடும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் விவேகமாக இருந்தால், விரைவில் இது முடிவுக்கு வரும்'', என்றார் அவர்.

அமெரிக்காவின் தொலைகாட்சி நிகழ்ச்சிக்காகப் பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் டோனல் டிரம்ப் அவ்வாறு கூறினார்.

மேலும், இந்தப் போரில் ஈரானுக்கு சீனா ஆயுத உதவிகள் வழங்கும் சூழலில் ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்துமாறு சீன அதிபர் சீ ஜின்பிங்குக்கு தாம் நேரடியாகக் கடிதம் எழுதியதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

''ஆமாம், அப்படிச் செய்ய வேண்டாம் என்று கேட்டு நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு அவர், அடிப்படையில் தான் அதைச் செய்யப் போவதில்லை என்று எனக்கு ஒரு கடிதம் எழுதினார்'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, இஸ்ரேல் மற்றும் லெபனான் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறும் எனவும் டிரம்ப் தமது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)