கோலாலம்பூர், 16 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலாலம்பூரைச் சுற்றியுள்ள சுமார் 45 திறந்த மற்றும் பசுமையான பகுதிகள் வெற்றிகரமாக அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிலங்கள் மேம்பாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் அபாயத்தில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 39 காற்பந்து மைதானங்களின் பரப்பளவிற்கு சமமான அந்த நிலங்கள், மக்கள் மற்றும் வருங்கால தலைமுறையினர்களின் உரிமைக்காக முழுமையாக பாதுகாக்கப்பட்டிருப்பதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் HANNAH YEOH வலியுறுத்தினார்.
"எனவே, முன்னதாக நிலம் இருந்தது. ஆனால், அது அரசாங்க பதிவேட்டில் வெளியிடப்படாத போது அது பாதுகாக்கப்படவில்லை. பராமரிக்கப்படவில்லை. அரசாங்க பதிவேட்டில் வெளியிடப்படாதபோது, யார் வேண்டுமானாலும் இந்த நிலத்தை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். ஆனால், வெளியிடப்பட்டப் பிறகு இந்த இடம் பசுமை பகுதியாகப் பாதுகாக்கப்படுகின்றது. எனவே, இது பசுமை வெளியைப் பாதுகாப்பது பற்றியது,'' என்றார் அவர்.
வெள்ளப் பிரச்சனைகள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவற்றை சமாளிக்க ‘Sponge City’ எனும் கருத்தாக்கத்தைப் பின்பற்றுவது உட்பட தலைநகரை நிலையான மற்றும் மீள்திறன் கொண்ட நகரமாக மாற்றுவதற்கு நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைவதாக, ஹன்னா கூறினார்.
"இந்த பணிக்குழு கோப்புகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இல்லையெனில், யாரும் இதை தீவிரமாகப் பின்தொடர முடியாத இயல்பான செயல்முறையின் வழியாகச் செல்லும். எனவே, நாம் தற்போது இதை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக. அது அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவுடன் நாங்கள் அறிவிக்க விரும்புகின்றோம்,'' என்றார் அவர்.
இதனிடையே, விண்ணப்பத்திற்கான காலக்கெடுவைக் குறைப்பதன் மூலம், அரசாங்க பதிவேட்டு செயல்முறையைக் கண்டறிந்து, மதிப்பீடு செய்து, விரைவுப்படுத்துவதே அந்த குழுவின் பணியாகும் என்று, அவர் தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]