Ad Banner
 பொது

எரிசக்தி விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்ய மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

16/04/2026 05:29 PM

புத்ராஜெயா, 16 ஏப்ரல் (பெர்னாமா) -- எரிசக்தி விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, பெட்ரோனாஸ் மற்றும் ஆஸ்திரேலியத் தரப்பினருக்கு இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் தொடர் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உள்நாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமைகளின் அடிப்படையில் இரு நாடுகளும் உதவுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

''நாங்கள் விவாதித்தோம், ஆஸ்திரேலியாவும் சில பொருட்களை உற்பத்தி செய்துள்ளது, நாங்களும் செய்கிறோம். எனவே இந்தப் பரிமாற்றங்கள் பயனுள்ளவை. நிச்சயமாக, இவை கடினமான, சோதனையான காலங்கள். ஆனால் நண்பர்களாக, சிறந்த  இருதரப்பு உறவுகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்,'' என்றார் அவர். 

இன்று, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ்-உடனான சந்திப்புக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அன்வார் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, மலேசியாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருப்பதால், இந்த ஒத்துழைப்பு இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என்று அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

''உலகம் முழுவதும் இருப்பது போலவே, நமது இரு நாடுகளுக்கும் மிகவும் சவாலான இந்த காலகட்டத்தை நாம் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மேலும் பணியாற்றுமாறு பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கும் எனது துறைக்கும் நாங்கள் பணித்துள்ளோம். இருப்பினும், மலேசியாவுடன் நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதில் ஆஸ்திரேலியா மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது,'' என்றார் அவர். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]