கோத்தா திங்கி, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்று, ஜோகூர், கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் துப்பாக்கிச் சூட்டு தாக்குலில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் முதியவர் ஒருவர், இன்று முதல் ஏழு நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூர்கலிடா ஃபர்ஹனா அபு பகார், இன்று அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கொலை வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-டின் கீழ் உட்பட்டிருப்பதால், 71 வயதான அந்த உள்நாட்டு முதியவரிடம் மேல் விசாரணையை மேற்கொள்ள அத்தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, சந்தேக நபர் காலை மணி 9 அளவில் கைவிலங்கிடப்பட்ட நிலையில், கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீசாரால் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
ஜோகூர், தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு உள்நாட்டு ஆடவர்களும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் உயிரிழந்ததாக நேற்று அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)