Ad Banner
Ad Banner
Ad Banner
 

மீள்திறன் கொண்ட பொருளாதார அடித்தளத்தை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது

17/04/2026 07:36 PM

கோலாலம்பூர், 17 ஏப்ரல் (பெர்னாமா) -- பொருளாதார வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல், உலகளாவிய நிச்சயமற்றத் தன்மைகளை எதிர்கொள்வதற்காக, மீள்திறன் கொண்ட மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதார அடித்தளத்தை, மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

நாட்டின் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தவும், வெளி அம்சங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த அணுகுமுறை உள்ளதாக, மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், தலைவர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் உட்பட, உலகளாவிய சூழல் சவாலாகவே நீடித்து வரும்போதிலும், 2026-ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் வளர்ச்சி கணிப்பை 4.1 விழுக்காட்டிலிருந்து 4.4 விழுக்காடாக உயர்த்த உலக வங்கி கடந்த வாரம் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி நாட்டின் வலுவான அடிப்படை பொருளாதாரத்தைப் பிரதிபலிப்பதாகவும், எனினும் மலேசியா அதிகம் மெத்தனமாக இருந்து விட முடியாது என்றும் தெங்கு சஃப்ருல் கூறினார்.

''வீழ்ச்சியடையவில்லை. மாறாக, ஏற்றம் கண்டுள்ளது. ஒருமுறை அல்ல. இருமுறை. மோதல்கள் நிறைந்த இந்த உலகில், உலக வங்கி மலேசியாவின் வளர்ச்சி கணிப்பை உயர்த்தியுள்ளது. 4 விழுக்காட்டிலிருந்து 4.1 விழுக்காடாகவும், தற்போது 4.4 விழுக்காடாகவும் உயர்த்தியுள்ளது. இதன் அர்த்தம், நமது பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதாகும். வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதோடு, உள்நாட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்து விறுவிறுப்பாக உள்ளன. ஆனால், நாம் அதீத நிம்மதியுடன் இருந்துவிடக் கூடாது. உலக எண்ணெய் விலை உயரும்போது, ​​அதன் தாக்கம் இங்குள்ள பொருட்களின் விலையையும் பாதிக்கும்,'' என்றார் அவர்.

உலகளாவிய வர்த்தகப் பதற்றங்கள் நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்றும் தமது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், தெங்கு சஃப்ருல் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)