Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எரிபொருளுக்கான உதவித் திட்டங்களில் திடீர் மாற்றங்கள் இல்லை - அரசாங்கம் உறுதி

21/04/2026 03:35 PM

ஜாலான் துன் ரசாக், 21 ஏப்ரல் (பெர்னாமா) --  மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி, உலகளாவிய எரிசக்தி சந்தைகள் மீது தொடர் அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், எரிபொருளுக்கான உதவித் திட்டங்களில் திடீர் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அவசர முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக தரவுப் பகுப்பாய்வு அடிப்படையிலான அணுகுமுறையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

மேற்கு ஆசியா மோதலினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் தாக்கம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்பதால் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும்பான்மையான மக்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கும் என்று டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.

''இது நாம் நிச்சயமாக அறிந்த ஒரு சவால்தான். அதிலிருந்து, நமது எரிசக்தி விநியோகம் உறுதி செய்யப்படுவதையும், மக்கள் பாதுகாக்கப்படுவதையும், பொருளாதார வளர்ச்சி தொடர்வதையும், தற்போது மேற்கொள்ளப்படும் உதவிகள் தொழில்துறைக்குக் கிடைப்பதையும் உறுதிசெய்ய நாம் தரவுகளை ஆராய வேண்டும்'', என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை பெர்னாமா வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு பிரமுகராக கலந்துகொண்டபோது டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் அவ்வாறு தெரிவித்தார்.

மாதாந்திர உதவித்தொகை தற்போது மாதத்திற்கு சுமார் 600 கோடி ரிங்கிட் முதல் 700 கோடி ரிங்கிட் வரை கடுமையாக அதிகரித்திருந்தாலும் இந்த மாற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களைப் பாதிக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)