நீலாய், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- அரசு சாரா அமைப்பு, என்.ஜி.ஓ சம்பந்தப்பட்ட 23 கோடி ரிங்கிட் நிதி மோசடி வழக்கு தொடர்பான பணப் பறிமாற்றங்களை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் கண்டறிந்து வருகிறது.
தற்போது தங்கள் தரப்பு வங்கி கழகங்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெற்று வருவதாகவும், அவை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்குள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், எஸ்.பி.ஆர்.எம்-இன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
''நாம் மேலும் பல தகவல்களையும் வாக்குமூலங்களியும் திரட்டி வருகிறோம். குறிப்பாக, எந்தவொரு தரப்பினரின் தனிப்பட்ட கணக்கில் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது போன்ற நாங்கள் தற்போது வங்கியிடமிருந்து உறுதிப்படுத்துதலுக்காக காத்திருக்கிறோம்,'' என்றார் அவர்.
இன்று, நெகிரி செம்பிலான், நிலாயில் உள்ள அமலாக்கம், தலைமைத்துவம் மற்றும் நிர்வகிப்பு பல்கலைக்கழகம், ஈ.எல்.எம்.யூ மற்றும் எஸ்.பி.ஆர்.எம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி செய்தியாளர்களிடம் பேசினார்.
சொத்துகள் வாங்குவது உட்பட, சம்பந்தப்பட்ட அந்தப் பணம் சொந்தத் தேவைக்காக தவறாக பயன்படுத்தியதற்கான தெளிவான அறிகுறிகள், இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]