ஜாலான் துன் இஸ்மாயில், 05 மே (பெர்னாமா) -- நெகிரி செம்பிலானில் எதிர்க்கட்சியாகச் செயல்பட அம்னோவிற்கு விருப்பமில்லை.
மாறாக ஒருமைப்பாட்டு அரசாங்க நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அக்கட்சித் தொடர்ந்து செயல்படும் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
நெகிரி செம்பிலானில் உள்ள அம்னோவின் 14 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதுள்ள அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில் கட்சியின் உயர்மட்டத் தலைமைச் செயற்குழு இறுதி செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.
''இல்லை, நாங்கள் எதிர்க்கட்சியாகும் எண்ணம் கொண்டிருக்கவில்லை, அது ஒரு அறிக்கை மட்டுமே. ஆனால், நெகிரி செம்பிலானில் உள்ள 14 சட்டமன்ற உறுப்பினர்களும் நெகிரி செம்பிலான் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே நீடிப்பார்கள் என்று மத்திய அளவிலான அம்னோ முடிவு செய்துள்ளது,'' என்று அவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அஹ்மாட் சாஹிட் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கட்சியிலிருந்து ஒரு மந்திரி புசாரை நியமிப்பது குறித்தும் அம்னோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அவர் மேலும் விளக்கினார்.
இதனிடையே சில மாநிலங்களில் திடீர் மாநிலத் தேர்தல் நடைபெறலாம் என்ற ஆருடம் எழுந்துள்ளது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)