Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மின்சாரம் தாக்கி மாணவி மரணம்; பல்கலைக்கழகத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

26/04/2026 05:14 PM

அலோர் ஸ்டார், ஏப்ரல் 26 (பெர்னாமா) -- கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நம்பப்படும் தமது மகளின் மரணத்தைத் தொடர்ந்து, வட மலேசிய பல்கலைக்கழகம், யூ.யூ.எம்-க்கு எதிராக தந்தை தாக்கல் செய்த 30 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான இழப்பீட்டு வழக்கை, அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்தது.

21 வயதான எஸ்.வினோஷினியின் மரணத்திற்கு மின்சார தாக்குதலே காரணம் என்பதை நிரூபிக்க பிரதிவாதி தவறிவிட்டதாக, நீதிபதி டாக்டர் ஜோன் லீ கியேன் ஹவ் @ முஹ்மட் ஜோன் லீ தமது தீர்ப்பில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த அறையில் உள்ள மின் சாதனங்கள் முறையாக இயங்கி வருவதாகவும், அவை சேதம் ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றும் மின் அமைப்பை விரிவாகச் சோதனை செய்த எரிசக்தி ஆணையம் தெரிவித்ததை ஆதரங்கள் காட்டுவதாக அவர் கூறினார்.

மேலும், வட மலேசிய பல்கலைக்கழகத்திற்கு 5,000 ரிங்கிட் செலுத்துமாறு பிரதிவாதியான ஆர். சிவகுமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொதுவான, கடுமையான மற்றும் முன்மாதிரியான சேதங்களுக்கு தலா 10 லட்சம் ரிங்கிட்டும், சிறப்பு சேதங்களுக்காக 50 ஆயிரம் ரிங்கிட்டும் கோரி, வட மலேசிய பல்கலைக்கழகத்திற்கு எதிராக கடந்த 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி, சிவகுமார் இழப்பீட்டு வழக்கை தாக்கல் செய்தார்.

2022-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, யூ.யூ.எம்-இல் கணக்கியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த இரண்டாம் ஆண்டு மாணவி வினோஷினி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததிருக்கலாம் என நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)