வாஷிங்டன் டி.சி., ஏப்ரல் 27 (பெர்னாமா) -- ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கை சனிக்கிழமை மேலும் குறைந்துள்ளது.
இந்நிலையில், அச்சுறுத்தலுக்கு உள்ளான பேச்சுவார்த்தைகளை ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் திட்டவட்டமாக நிராகரித்த வேளையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது தூதர்கள் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அழுத்தம், அச்சுறுத்தல்கள் மற்றும் முற்றுகையின் கீழ் ஈரான் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாது என்று சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்புடன் தொலைபேசியில் உரையாடியபோது, பெஷேஷ்கியன் வலியுறுத்தினார்.
அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையும், ஈரானுக்கு எதிரான பிற நடவடிக்கைகளும் பரஸ்பர நம்பிக்கைக்கு இடையூறாக அமைந்துள்ளதாகவும், தொடர்ச்சியான அழுத்தமும் மோதலும் பேச்சுவார்த்தையை மேலும் கடினமாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, வட்டார அமைதி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தற்போது பாகிஸ்தான், ஓமன் மற்றும் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், இப்பயணம் ஈரான் தனது தேசிய நலன்களை உறுதியாகப் பாதுகாத்தவாறு, அரச தந்திரத்தின் மூலம் நீடித்த அமைதியை அடையும் என்று நம்புவதாக அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் ஃபாத்திமா மொஹஜெரானி தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், தனது தூதர்கள் சிலரின் பாகிஸ்தான் பயணத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
அதோடு, பயணங்களிலேயே அதிக நேரம் வீணாகுவதாகவும், அதிக வேலை மட்டுமின்றி, அவர்களின் தலைமைத்துவத்தில் பெரும் உட்கட்சிப் பூசலும் குழப்பமும் நிலவுவதாகவும் அவர் தமது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர்கள் பேச விரும்பினால், அழைத்தால் மட்டும் போதும்" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)