கோலாலம்பூர், ஏப்ரல் 27 (பெர்னாமா) -- தமது சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதித்ததாகக் கூறப்படும் கூடுதல் ஆவணம் தொடர்பான நீதி சீராய்வு விண்ணப்பத்தை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை அவர் மீட்டுக் கொண்டுள்ளார்.
அந்த மேல்முறையீட்டு அறிவிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, SRC International நிறுவனத்திலிருந்து நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் மோசடி செய்த குற்றத்திற்காக காஜாங் சிறையில், தண்டனையை எதிர்கொண்டு வரும் 72 வயதுடைய நஜிப் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தொடர்கிறார்.
டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி, காஜாங் சிறையில் தண்டனையை எதிர்கொண்டு வருகிறார்.
உயர் நீதிமன்றம் தொடக்கத்தில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதித்தது.
பின்னர், அந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றமும் கூட்டரசு நீதிமன்றமும் நிலைநிறுத்தின.
எனினும், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி நஜிப் தாக்கல் செய்த அரச மன்னிப்பு மனுவினால், மன்னிப்பு வாரியம் அவரின் சிறைத் தண்டனையை ஆறு ஆண்டுகளாகக் குறைத்து, அபராதத்தையும் ஐந்து கோடி ரிங்கிட்டாகக் குறைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)